muslim attaweerawewa

பாடசாலை நாட்கள்

வாழ்நாளில்
திரும்பவும் கிடைக்காத
இனிய நினைவுகள்!
அவை இளம்பருவத்து
இனிய காலங்கள்!
நினைக்கும் போதெல்லாம்
இதயத்தில் இனிமையைத் தரும் 
பாடசாலை நன்பர்களுடன்
பழகிய நாட்கள்.!

சிலருக்கு...

நினைவில் வந்தவுடனே
மனசெல்லாம்
பஞ்சாய்ப் பறக்கும்!
பழகிய உறவுகள் எல்லாம்
நெஞ்சில் வந்து கனக்கும்!
பருவவயது மாற்றங்கள் எல்லாம்
இதயத்தில் தங்கி இனிக்கும்!

ஒரு சிலருக்கோ...

சிறுவயது நினைவெல்லாம்
சிலிர்த்தெழுந்து சுற்றும்!
அன்னைபோல்...
மடிமீது வைத்து தாலாட்டும்!
இனிமைப் பாலூட்டும்!

வேறு சிலருக்கோ....

மனநிலையை வீரியமாக்கும்!
பழைய நினைவுகளை
இன்னும் விரிவாக்கும்!
அவ்வாறே...
மனக்கதவு திறக்கும்..!
அப்படியே...
உங்கள் மனசு போய்
பாடசாலையில் வீழ்ந்து - உங்கள்
கவலைகளெல்லாம் மறக்கும்.!!

விவசாயப் பசுமைப் புரட்சியின் ஆணி வேராக இருந்து செயற்படும் விவசாயிகளைக் கொண்ட இயற்கை வளங்களை இயற்கையாக கொண்ட பூமியில் அமைந்திருக்கும் அட்டவீரவெவ முஸ்லீம் வித்தியாலயம்.

எனக்கும்!!!
அ,ஆ சொல்லிக் கொடுத்த ஆரம்பப் பாடசாலை அது.

நீண்ட நெடிய கூழ மரங்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் தாம் நனைந்து அவை நின்ற குளக்கரையின் வீதியின் குளிர்ச்சிக்கும் அருகிருந்த எனது பாடசாலையின் சிறார்களின் பிஞ்சுத் தேகத்திற்குமாக நெடுங்குடை விரித்து எப்போதும் புன்னகைப் பூக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்த வேப்ப மரங்கள், பனை மரங்கள். அட்டவீரவெவ முஸ்லீம்  வித்தியாலயத்தின் முன்பாக. அழகான என்றும் வற்றாக குளத்தின் இயற்கை   அழகும் என் நெஞ்சை விட்டும் என்றும் வற்றாதவை.

வெள்ளிக் கிழமை என்றால் மனதில் அவ்வளவு குதூகலம் பதினொன்னரை மணியுடன் வீடு திரும்பும் வழியிலே குளத்தில் ஜும்மா குளியல்.. சனி ஞாயிறு விடுமுறை.
திங்கள் கிழமையென்றால் செய்யத் தவறிய வீட்டுப் பாடத்தை மனதில் எண்ணிக் கொண்டு கால்கள் நடக்க மறுக்கும் தருணங்கள் எண்ணிலடங்கா இன்பம்.  இளம் பிராயத்திலேயே இஸ்லாத்தைக் கற்க மதரசா என கல்விக்கு எந்த குறையும் இருக்கவில்லை எனதூரில்.

ஒழுக்கநெறியை அழகாகவும் கண்டிப்போடும் கற்றுகொடுக்கும் மெளலவி மார்கள்.. மதரசாக்களுக்கு செல்ல வேண்டுமே என்கிற பயத்துடனே பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் பொழுதுகள்!!!

அட்டவீரவெவ வித்தியாலயத்தின்  ஆசிரிய சிற்பிகள். பசும் மண்ணென பாடசாலை நுழைந்த அந்தப் பாலகர்களை பதமாக வார்படுத்தி எடுத்தவர்கள் அந்த  சிற்பிகள்.
அவர்களின் கண்டிப்பிற்கு பயந்து பாடசாலை செல்ல மறுத்தது எத்தனையோ கால்கள்.

மர்ஹூம் அதிபர் சித்தீக் மெளலவி சேரின் நேரடி கண்காணிப்பிலும் நேர்படுத்தலிலும் மேலும் மேலும் பதப்படுத்தப்பட்டார்கள் அந்தப் பாலகர்கள்.  என்றுமே மாணவர்களின் கல்வித்திறனிலும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் குறை இருக்கவில்லை.

பள்ளிப்பருவத்தைக் களித்த மாணவன் என்றால் அவனை தனித்துவமாகத்தான் சமுதாயம் பார்க்கின்றது. ..

அங்கிருந்த அந்தக் குளத்தின் அழகிலும் மரநிழலின் குளிர்ச்சியிலும் நான் மயங்கியிருந்த காலங்கள் எத்தனை. மனதில் பசுமையாக மனதின் ஆழ் கரைகளை முட்டி மோதும் நினைவலைகள் மகிழ்ச்சியின் துளிகளை, இன்றும் நினைக்கும் போதெல்லாம் தெளித்துக் கொண்டிருக்கின்றன. ஐந்து முதல் பத்து வயது வரையான ஞாபகங்கள் அவை. ஆனால் ஐம்பதாண்டு சென்றாலும் மறக்காது. குளக்கரையில் நின்றுகொண்டு சிறு கூழாங்கற்களால் குளத்தின் நீளம் பார்க்க, கல்லை விட்டெறிந்த நாட்கள். கூழ மரத்தின் நெடிய உயரத்தை அண்ணாந்து பார்த்து பார்த்து ஆச்சரியமும் ஆசையும் அடைந்த நாட்கள்.  இடைவேளையில் நண்பி நண்பர்களுடன் ஓடி பிடித்து விளையாடி, விழுந்து காலில் ஏற்பட்ட காயத்தின் அடையாளத்தை இன்றும் சுமக்கக் 
காரணமான அந்த நாட்கள்.  குளக்கரையில் வீரமாக நிற்கும் விளா மரத்துக்கு கல் அடித்து விளாங்காய் பறித்த நாட்கள்.
நிலைக்குத்தாகப் பேனா பிடித்திருந்தால் இடைநடுவில் எழுதாமல் பேனா நின்றுவிடும். மை கீழ் இறங்கியதால் தான் பேனா எழுதாமல் நின்றது என்ற காரணத்தைக் கண்டறிந்து, பெரிய நீயூட்டன் போல நண்பர்களிடம் ஆராய்சி அறிவையினைப் பெருமையாக பேசிய நாட்கள். அத்தனையும் மனதினுள் பொக்கிசமாக.

காலம் இன்று மிகவேகமாக மின்னல்போல நகர்கின்றது. போய்ச் சேர வேண்டிய, அடைய வேண்டிய தேவைகள் என் முன்னே. ஆனால் அவைகளை நினைக்கும் போது அந்த பொக்கிஷங்களை மனதின் ஓரத்தில் மெல்ல வைத்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். நம் வாழ்வில் ஒவ்வொரு கட்டமும் மகத்தான பொக்கிசங்கள். அவைகளை அவ்வப்போது இரசித்துவிட்டு நினைவுகளின் பொக்கிசவறையில் சேமித்து விட்டு நாம், நம் இலக்குகளை நோக்கிய எமது நெடிய பயணத்தினைத் தொடர வேண்டியதுதான்.

Comments