muslim attaweerawewa

எங்கள் கிராமம் முஸ்லீம் அட்டவீரவெவ

 
பல விவசாய உழைப்பாளிகள்  கல்விமான்களை தன்னகத்தே கொண்ட பூமி. உப உணவுப்பயிற்செய்கைக்கு ஏற்ற செம்மண், நெற் செய்கைக்கு ஏற்ற பொன்நிறமண் வளத்தையும் கொண்ட விவசாய பூமி. வற்றாத நன் நீரூற்றை தன்னகத்தே கொண்ட செழிப்பான பூமி.  அட்டவீரவெவ வடக்கு எல்லையில் ஓடும்  இரு பெரும் ஆறுகள் நீர் வளங்களை கொண்ட அழகான வளமான கிராமம்.

#கிராமத்தின் அமைவிடம்

 
இலங்கைத் திருநாட்டில் வடமத்திய  மாகாணமான அநுராதபுரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கெப்பித்தி கொள்ளாவ பிரதேச சபைக்குட்பட்ட 32 ஆவது கிராமசேவை நிர்வாக பிரிவில் உள்ள கிராமம் முஸ்லீம் அட்டவீரவெவ. கெப்பித்தி கொள்ளாவை பிரதேசத்தில் இருந்து  சுமார் 24 கிலோமீற்றர்களுக்கு அப்பால்  சுமார் ஒன்பது சதுர கிலோமீற்றர்களை பரப்பளவாகக் கொண்டது எமதுகிராமம். எமது கிராமத்தை நமடவெவ, மற்றும் குருலுகமை வீதி என்பன ஊடறுத்து செல்லுகின்றன. .

இன்னும் குறிப்பாக சொல்வதானால் எமது கிராமத்தை சுற்றி பண்டார உள்பத்தை, குருளுகமை, ஆனைவிளுந்தான்,பத்தாவை,நமடவெவை என்னும் கிராம நிலப்பரப்புகளும் மட்டிகொணாவை,கள்ளாவை,கோண்காவை,டிக்காவை என்ற நீர்ப்பரப்புக்களும் அமைந்துள்ளது

எமது ஊரில் புதிய ஊரிலும் மற்றும் பழய ஊரிலும் 650 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தற்பொழுது வசிக்கின்றன. வசதியான வாழ்வை அமைத்திட பண்பட்ட செந்நிலமும் வற்றாத நிலத்தடி நன்நீரூற்றும் கால்நடை மேய்ச்சல் பரப்பும், மக்களுக்கு சந்தோஷமும், மன அமைதியூம் ஈட்டும் பெரும்வளங்களாக இயற்கை  வழங்கிய பெரும் குளமும் அமைந்துள்ளன.

அட்டவீரவெவ எனும் பெயர் வரக் காரணம்

 
அட்டவீரவெவ என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உறுதியாக கிடைக்காவிட்டாலும் “அட்டவீரவெவ” என நாம் விருப்புடன்; உள்ளத்திலிருந்து உச்சரிக்கும் இப்பெயர் அமைந்ததற்கான காரணத்தை ஊர் மக்களால் வாய்மொழியாக வழங்கி வரும் தகவல் மூலம் கூறலாம். வாய்மொழியாக வழங்கி வருவதால் அவற்றை வெறும் கதைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இவை ஏற்றுக்கொள்ளக் கூடிய கதையாகவூம், கதைக்கான காரணங்கள் சிலவற்றை நாம்  காணக்கூடியதாக உள்ளது.

பல தலைமுறைகளுக்கு முன்பு மழைநீர் கடலில் கலப்பதை தடுத்து அதனை தேக்கி வைத்து விவசாயத்திற்காக பயண்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு   அருகருகே குளங்களை கட்ட  மக்கள் ஒன்றிணைந்தனர் இவ்வாறு எட்டு குளங்களை அருகருகே கட்டினர். அட்ட வீர வெவ (எட்டு  வீர குளம்)  இவ்வாறே அட்டவீரவெவ எனும் பெயர் உருவானதாக ஊர் பெரியவர்களின் கருத்து. இக் கிராமத்தின் தென் பகுதியில் சோலைக்காடும், வட பகுதியில் நீர் நிலைகளும், கிழக்குப் பகுதியில் வயல் பரப்பும், மேற்குப் பகுதியில் கள்ளாவை.மட்டிகொணாவை குளத்தோடு சேர்த்த வயல் பகுதியும் மத்தியில் குளமும் அழகுக்கு அழகூட்டுகின்றன. 

வாழ்வூ தேடி வந்தவர்களுக்கு விவசாயமே கை கொடுக்கின்றது. .

எவை எப்படியிருப்பினும் மேற்கூறப்பட்ட காரணம் அட்டவீரெவ என்ற பெயருடன் பொருந்தி வருவதால், உண்மை என நம்பப்படுகிறது. ஆனாலும் இது இன்னும் ஆய்வூக்குரிய ஒன்றே?

விவசாயம்

 
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்    மற்றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்

என்ற  வாக்குக்கமைய இங்கு வாழும் பெரும் தொகையான மக்கள் உழவுத் தொழிலையே முதற்கண் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள்கள். அட்டவீரவெவ கிராமத்தில், நீர்வளம் மட்டுமல்ல நிலவளமும் இவ்வூர் மக்களுக்கு இயற்கையாக அமைந்த ஒன்றாகும். .அட்டவீரவெவ செம்மண் இவ்வூர் மக்களுக்குச் செம்மையான வாழ்வைச் செவ்வனச் செய்வதற்கேற்ப அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் தம் நிலத்தைப் “பொன் விளையூம் பூமி” எனப் பெருமையாக கூறுவர். வருடம் பூராகவூம் எத்தகைய பயிரைச் செய்தாலும் இம் மண்ணில் அப்பயிர்கள் செழிப்புடன் விளைவதும், வளர்வதும் இவ்வூர் மண்ணின் சிறப்புத் தன்மையாகும். மிகச் சிறந்த முறையில் நுட்பமாக விவசாயம் செய்வது அட்டவீரவெவ மக்களின் ஆழ்ந்த அனுபவத்தையூம் ஆற்றலையும் எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு பயிரும் விளையும் காலங்களையும் அவற்றின் ஒவ்வொரு பருவங்களையும் அவற்றின் தட்ப நுட்பங்களையும் நன்கறிந்து அவற்றிற்கேற்ப பயிர்ச்செய்யும் முறைகள் இவ்வூர் மக்களின் அனுபவக் கல்வியே.

ஆரம்ப காலங்களில் விவசாயத் தொழில் விருத்தியில் கரிசனை கொண்ட மூதாதையர் கூட்டுக் குடும்ப வாழ்கையின் ஒரு அங்கமான பட்டை கட்டித் துலா மிதித்து நீர்பாய்ச்சிப் பயிர்களை வளர்த்தெடுத்தனர். சூத்திரக் கிணறுகளை நிறுவி எருது பூட்டி நீர்பாய்ச்சியதும் உண்டு.

நெல் வேளாண்மை, சோளம், மிளகாய், குரக்கன், கத்தரி, வெண்டி, மரவள்ளி, பயற்றை, வாழை  போன்ற பயிர்கள் இம்மண்ணில் செழிப்பாக வளர்வன. இத்தகைய பயிர்கள் பெருமளவில் பயிரிடப்பட்டு வந்தாலும் தற்போது உள்ள காலத்தில் அவைகள் அரிதாகவே பயிரிடப்படுகிறது.  

 
விவசாய உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் விவசாய உழைப்பாளிகள் மிகவூம் உன்னத நிலையில் கௌரவிக்கப்பட்ட வேண்டியவர்களே.

#மனைத்தொழில்கள்

 
உழவூத் தொழிலையே முதன்மையாக கொண்டிருப்பினும் வீட்டுமனைத் தொழில்களும் குடும்பத் தலைவிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஈட்டப்படும் வருமானம் குடும்ப அடிப்படை தேவைகளை முற்று முழுதாக பூர்த்தி செய்ய போதுமானதாக அமைவது எங்கள் குடும்ப பெண்களின் உழைப்பின் உயர்வை எடுத்துக் காட்டுவதாகும். வீட்டுமனைத் தொழில்களாக ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், தையல்,  என்பனவும் அட்டவீரவெவயின் பிரியமான அபிவிருத்திச் செயற்பாடுகளாக இடம்பெறுகின்றன. மாரிகாலப்பகுதியில் கால நிலையால் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப பன் ஓலைகள் மூலம்  கடகம், பெட்டி (ஒமல்), பாய்,  நெய்தல் எனுபவற்றை பொழுது போக்காக வைத்திருக்கின்றனர் எமது பெண்கள் .

#பனை

வயற்காட்டில் இயற்கையாக அமைந்த வளங்களில் பனையும் ஒன்று.  பனைமரம் எம்மக்களுக்குப் பல பயன்களை அளித்து வருகின்றன. நுங்கு, பனங்கிழங்கு,  போன்றவை இவ்வூர் மக்களின் ஓய்வு நேரங்களுக்கு விருந்தளிக்கிறது.

#பள்ளிவாயல்கள்
 
இத்தகைய பெரும் இயற்கை வளங்களையும் சிறப்புகளையும் கொண்ட அட்டவீரவெவ கிராமத்தில் பழய ஊரில் ஒரு ஜும்மாப் பள்ளி வாயலும், ஒரு தக்கியாப் பள்ளி வாயலும், ஒரு குர்ஆன் மதரசாவும் உள்ளதுடன். புதிய ஊரில் ஒரு ஜும்மாப் பள்ளிவாயலும் அவ்வளாகத்திலேயே குர்ஆன் மதரசாவும் அமைந்துள்ளன. 

#பாடசாலை

இவ்வூர் மக்கள் விவசாயத்தின் மீது கொண்டுள்ள உழைப்புபோல் தம்மக்களின் கல்வி முன்னேற்றத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்கள். அட்டவீரவெவ மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு ஆதாரமாக விளங்கிய பாடசாலை முஸ்லீம் அட்டவீரவெவ முஸ்லீம் வித்தியாலயம் ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து ஆறுகளில் நிறுவப்பட்டு ஆரம்பக் கல்வி முதல் ஆறாம் வகுப்பு வரை கல்வி வழங்கிவந்தது. 90 களின் பின்னர்  ஒன்பதாம் வகுப்பு வரை கல்வியை வழங்கியது. அதன் பின்னர்
மேற்படிப்புக்காக மாணவர்கள் வேறு பாடசாலைகளை தேடிச் சென்றனர்.

#எமது பாடசாலையின் ஆசிரியர்கள்.

 
எமது பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற எமது கிராமத்து, வெளியூர் ஆசிரியர்களில் பெரும் பகுதியினர் பாடசாலை நேரத்திலும், பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களிலும் மாணவர்களின் முன்றேற்றத்தில் பிரத்தியேக அக்கறையூடன் செயற்பட்டு நல்ல மாணவர்களை உருவாக்கி எமது கிராமத்தின், சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றுகின்றனர். இதனாலேயே இன்றும் எம் கிராமத்து நெஞ்சங்களில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 #கிராமத்துக்கு இளைஞர்களின் பங்களிப்பு

இளைஞர்களால் பல செயற்திட்டங்கள் செயற்படுத்தப் பட்டு வருகின்றன. குறிப்பாக பாடசாலைக்கு வாசிகசாலை ஒன்றை நிறுவுதல், தொலைத் தொடர்பாடல் வசதியை மேம்படுத்த பாடுபடல். விளையாட்டு மைதானம் ஒன்றை நிறுவ கடின உழைப்பைக் கொண்டு பாடுபடல்.        விளையாட்டுக் கழகங்களால்  கரப்பந்தாட்டப் போட்டிகள் கிரிக்கட் போட்டிகள்  என்பன நடாத்தப்பட்டு வருகின்றன. மிக ஆரம்பகால கட்டங்களில் மாட்டுவண்டி சவாரி எமது கிராமத்தின் எல்லையில் வருடம்தோறும் நடைபெற்று வந்தன. 

 
நற்பண்புள்ள இளைஞர்களை உருவாக்க   பெரிதும் பாடுபடும் எமது பாடசாலை ஆசிரியர்களை வாழ்த்தியே ஆக வேண்டும் . இளைஞர்களின் ஓய்வூ நேரங்களில் ஏற்படும் மனச்சிதறல்களை ஒழுங்கு படுத்தும் முகமாகவும், பொது அறிவை மேம்படுத்தும் நோக்குடனும்   வாசிக சாலைகள் அமைக்க பாடுபடும் இளைஞர்களுக்கும் நன்றி. மேலும் உள்கள, வெளிக்கள விளையாட்டுக்களை ஏற்படுத்தி பொழுது போக்குடன் கூடிய ஆரோக்கிய பேணலையூம் ஏற்படுத்தி. இத்துடன் கரப்பந்தாட்ட போட்டிகளை ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தி ஏனைய கிராம மக்களுடன் நட்புறவு பாலங்கள் அமைய வழி வகுத்தனர்.

இத்தகைய சகல நல்ல அம்சங்கள் கொண்ட கிராமத்தை மேலும் கட்டியெழுப்ப தேசப்பற்றும், ஊர்ப்பற்றும் கொண்ட   பொருளாதார சூழலால் வெளிநாடுகளில் பணிபுரியும் அணைவரும் எமது கிராம முன்னேற்றத்திற்கென அமைக்கப்பட்ட அமைப்புக்களினூடாக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செயற்படுத்த முன்வர வேண்டும். 

 மானிடத்துக்கான சிக்கல்கள் எவ்வடிவிற் தோன்றிடினும் உழைப்பால் காடுகளை வளமான செழிப்பான கிராமமாக உருவாக்கி அநுராத புர மண்ணில் தன்பெயரை பொறித்துக்கொண்ட எங்கள் இனிய கிராமம் அட்டவீரவெவ. இக்கருத்துக்கு மேலும் உரம் சேர்க்கும் வகையில் இன்று உலகில் எத்திசையில் வாழ்ந்தாலும் அட்றாவையான் ஒற்றுமையோடு தம் ஊருக்காகக் கைகோர்த்து நிற்கும் காட்சிகள் பெருமைப்படத்த்கதே


Comments