muslim attaweerawewa

muslim attaweerawewa வாழ்த்துகின்ற 
மக்களுக்கு மத்தியில்... 
வாழவைத்த என் 
 கிராமம் தான் முஸ்லீம் அட்டவீரவெவ 

வயலும் , வயலும் சார்ந்த பகுதியும், 
வீர
ஊற்றெடுத்த ஊர்... 

வேட்டைக்கு ஏற்ற மலைப்பகுதிகள் 
வெள்ளாமைக்கு ஏற்ற நிலங்கள். 
 ஊரை சுற்றிய 
 புதர்க்காடுகள் 

மூதாதையர்களால் உருவான 
அழகுக் குழந்தையே... 
என் கிராமம்... 
ஒன்றரை நூற்றாண்டுகளைத்
தொலைத்து விட்ட பொழுதிலும் 
இரண்டாவது நூற்றாண்டிலாவது 
முன்னேறத் துடிக்கும் 
என்  கிராமம்... 

இலங்கை வரைபடத்தில் 
அறிய முடியாத ஓர் அரைப்புள்ளி... 
இயன்றவரை பேர் சொல்லும் 
அட்ட வீர வெவ கிராமம்... 

ஊருக்குள் வருபவருக்கும் 
ஊரின் பசுமையை 
உரக்கச் சொல்கின்ற 
பச்சை வண்ணத்தில் 

பெயர் பொறிக்கப்படாத
கூளமரம் குளத்தோரத்தில்
ஊரின் வயதை 
உளமாற நினைவுபடுத்துகிறது... 
ஆடுகள் எல்லாம் 
மேய்ந்த புல்தரைகள் - இன்று 
வீடுகள் சூழந்தன. 
.. 

என்னையும் பெற்றெடுத்த 
என் கிராமத்தாயின் கருப்பை... 

குளக்கட்டை கட்டிய 
மக்களை 
மறவாத  ஊர்மக்கள் மத்தியில் 
நிறை குளத்தை 
மறக்க முடியாத வெளியூர் மக்கள்... 
சாப்பாடு கட்டி எடுத்துக்கொண்டு 
பக்கத்து வீட்டு நண்பர்களோடு சேர்ந்து 
பாதம் நோக நடை நடந்து 
பாட சாலை நோக்கி 
பக்குவமாகச் சென்றதும் இக் குளக் கட்டிலேயே....

பசுக் கூட்டங்களைப் 
பார்த்து ரசித்து விட்டு
பசுக்கள் வீடு திரும்பும் வரை 
பல நிமிடம் காத்திருந்தது ஒரு காலம்
 
ஆனால் இன்று 
மாயமானது 
மாட்டுத் தொழுவங்கள் மட்டுமல்ல  
பழைய நினைவுகளும் தானே... 
சிகரம் தொட்ட பல 
அண்டை ஊர்களுக்கு மத்தியில் 
அவற்றுக்கெல்லாம் 
அகரமாய் இருந்தது 
அடியேனது இக் கிராமம்  

தெருவுக்கு ஒரு வீட்டில் மட்டும் 
தொலைபேசி என்றிருந்த காலம் போய் 
வீட்டிற்கு நாலைந்து 
கைபேசி என்றானது 
முன்னேற்றத்தின் தான்... 
வளர்ச்சியின் அடையாளம் தான்... 

ஆனாலும் 
நட்பு பாராட்டும் 
நல விசாரிப்புகள் இங்கே 
குறையத் தொடங்கியது தான் 
கொஞ்சம் வருத்தமளிக்கிறது... 

மக்கள் அன்று 
சூட்டுக் களங்களை வைத்து 
நெல் போரிட்டு வளர்ந்தது 
மகிழ்ச்சிக்கு காரணமானது... 

ஆனால் இன்று 
மாடுகளை வைத்து 
சொல் போரிட்டு 
தளர்வது தான் 
மார்பு துளைக்கும் இரணமானது... 

அழகில்லாத அளவான வீடுகளில் கூட 
அகலமான அளவு 
தொலைக்காட்சிப் பெட்டி 
வந்தது வளர்ச்சிதான் -  
 வீழும் 

நெல்மணிக்காக வருந்தாமல் 
நாடகத்தில் அழும் 
பெண்மணிக்காக வருந்தும் 
தாய்மார்கள் பெருகியதுதான் மிச்சம்... 

வருமானத்திற்காக வெளியூர் 
தேடிச் செல்லும் ஆண்களுக்கு மத்தியில் 
தன்மானம் காக்க 
உள்ளூரில் விவசாயம் செய்யும் 
ஆண்களைப் பார்த்தால் 
பெருமையாய் இருக்கிறது -ஆனால் 
புகையிலை போல் என் 
ஊர் ஆண்களின்  
உழைப்பெல்லாம் 
புகைந்து போவதை நினைத்தால் மட்டும் கொஞ்சம் 
நெடியடிக்கிறது 

நெஞ்சிக் கூட்டில்... 
திண்ணைகள் அலங்கரித்த வீடுகளும் 
பண்ணையை ஆட்கொண்ட மாடுகளும் 
எண்ணத்தில் இருந்து விலகியது ..

கண்ணத்தைக் கிள்ளி 
கண்டு கொண்டேன் 
கனவல்ல நிஜம் தானென்று... 

அன்று 
வேட்டையாடிய 
வனப்பகுதியும் இதுதான்... 
கோட்டை கட்டி ஆட்சி செய்த 
சோலைப் பகுதியும் இதுதான் 
மூட்டை மூட்டையாய் 
நெல் விளைந்த 
வயல் பகுதியும் இதுதான்... 
ஆனால் இன்று 
கூட்டம் கூட்டமாய் 
மக்கள் இன்று 
பிழைப்புக்காக வெளிநாடுகளை 
நாடுகிறார்கள்... 
காரணம் விதியா இல்லை சதியா 
விடை தெரியவில்லை... 

பலரது வீடுகளில் 
குளிர் சாதனப் பெட்டி ..
வளர்ச்சி தான் - அங்கு 
ஈரப்பசையோடு இருப்பது 
காய்கனிகள் மட்டும் தான் - ஆனால் உயிர்ப்பசையின்றி 
காடுகள் சாகிறது 
பலரது உழைப்பில் வந்த 
நெல்மணிகள்... 

அன்று  சோறுண்டு 
காண முடிந்த 
உடல்கள்..

இன்று ஏழு மருந்துகள்
குடித்தும் நோய் குறைவதில்லை..
என்பது நம் முன்னேற்றத்திற்கு 
இழுக்கு தருகிறது... 

ஊர் சுற்றிய இளைஞனுக்கு 
ஊதியம் கொடுத்தது விவசாயம் அதுவும் இப்பொழுது நவீனமயமானது
 

இங்கு 
பங்காளிச் சண்டைகளில்  
பீதியானது 
பக்கத்து ஊர்களுமே தான்... 
எழுதுகோல் பிடித்தறியாத 
கைகளில் கூட இன்று 
எலக்ட்ரானிக் வீடியோகேம்கள் 
இமாலய வெற்றி தான்...
 
ஆனால் 
நலம் பேணுகிற 
நாட்டுப்புற விளையாட்டுக்கள் எல்லாம் 
நகர்வலம் சென்று விட்டதோ... 
என நம்மை நாமே கேட்க 
வேண்டியதாயிற்று... 

இவ்வூரைப் பற்றி இன்னும் 
எவ்வளவோ சொல்லலாம்... 
என்னதான் சொன்னாலும் 
எஞ்சி நிற்கும் சொல் எல்லாம் பலருக்கு
மகிழ்ச்சியளிக்கும்.......

Comments